search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    1 வருடமாக குடிநீர் இல்லை - திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

    1 வருடமாக குடிநீர் இல்லை என கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தும் இன்னும் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை தலை தூக்கி வருகிறது. இதே போல் திண்டுக்கல் மாவட்டத்திலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சின்னாளப்பட்டி அருகே உள்ள அமலிநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு ஒரு வருடமாக முறையான குடிநீர் கிடைக்கவில்லை என கூறி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், அமலி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். பெரும்பாலும் கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த 1 வருடமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே தற்போது ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விலைக்கு வாங்கி வருகிறோம். ஏழ்மை நிலையில் உள்ள பல மக்களுக்கு இந்த தொகை மிகவும் இயலாத தொகையாகும். குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காத நிலையில் மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தோம். எங்களது தண்ணீர் தேவையை பேரூராட்சி நிர்வாகம் பூர்த்தி செய்யாவிட்டால் அடுத்தகட்டமாக சாலை மறியலில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து தங்கள் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்துச் சென்றனர்.
    Next Story
    ×