search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருவண்ணாமலை அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

    திருவண்ணாமலை அருகே 17 வயது சிறுமிக்கும் நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் நிச்சயித்திருந்தனர்.

    அதன்படி இருவீட்டாரும் கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டில் நேற்று காலை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் சிறுமி திருமணம் குறித்து சமூக நலத்துறை அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி உத்தரவின் பேரில் சமூக நலத்துறை ஊழியர்கள், குழந்தை பாதுகாப்பு அலுவலர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் திருமணம் நடைபெற இருந்த மணமகன் வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது அங்கு திருமண கோலத்தில் இருந்த சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். சிறுமி 9-ம் வகுப்பு படித்திருப்பதும், 18 வயது பூர்த்தியடையாமல் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து 18 வயது பூர்த்தியடையாமல் பெண்ணுக்கு திருமணம் செய்ய கூடாது. இது சட்டப்படி குற்றமென அவர்களது பெற்றோரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் கூடாதென பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் குழந்தை திருமணம் நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    Next Story
    ×