search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழருவி மணியன்
    X
    தமிழருவி மணியன்

    ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவார்- தமிழருவி மணியன்

    ரஜினிகாந்த் நிச்சயமாக அடுத்த ஆண்டு கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலை எதிர்கொள்வார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
    • ரஜினி நிச்சயமாக அடுத்த ஆண்டு கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் உறுதி.
    • பாரதிய ஜனதாவுடன் ரஜினிகாந்த் இடைவெளியில் தான் இருந்து வருகிறார்.
    • ரஜினிகாந்த் ஒருபோதும் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டார்.

    சென்னை:

    காந்திய மக்கள் இயக்க தலைவரும் ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வரும் தமிழருவிமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவிடம் இருந்து எப்போதும் விலகியே இருக்கிறார். அவர் எந்த சாயத்தையும் பூசிக்கொள்ள விரும்பவில்லை என்று நான் 2½ ஆண்டு காலமாக சொல்லி வருகிறேன்.

    அவர் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே கட்சி தொடங்குவதற்கு தயாராகத்தான் இருந்தார். அன்றைய சூழ்நிலையில் தொடங்கினால் ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

    அவர் கட்சி தொடங்கி கூட்டணியின் தலைவராக இருந்து வழிநடத்தி செல்வார். இந்த அணியில் யார்-யார் கூட்டணியில் இடம் பெறுவார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அது அன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்து அமையும்.

    ரஜினிகாந்த் நிச்சயமாக அடுத்த ஆண்டு கட்சியை தொடங்குவார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்வார்.

    திருவள்ளுவர் சிலை தொடர்பாக ஒவ்வொரு கட்சிகளும் கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், அவர் தனது கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அவர் கடந்த காலங்களில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான சில கருத்துக்களை கூறியிருக்கலாம்.

    அதாவது மோசமானவர்கள் கூட சில நேரங்களில் நல்ல முடிவுகளை எடுப்பது வழக்கம். அதுபோல பாரதிய ஜனதா நல்ல முடிவுகளை எடுத்தபோது அதை அவர் பாராட்டி இருக்கிறார்.

    ரஜினிகாந்த்

    மற்றபடி பாரதிய ஜனதாவுடன் இடைவெளியில் தான் அவர் இருந்து வருகிறார்.

    தமிழ்நாட்டை நாசமாக்கிய அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இது என்னுடைய முக்கியமான எண்ணம் ஆகும். 1967-ல் காமராஜர் தோற்கடிக்கப்பட்டபோது தான் எனது அரசியல் பயணம் தொடங்கியது.

    கடந்த 50 ஆண்டு காலத்தில் திராவிட கட்சிகள் என்ன செய்துள்ளது என்பதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த கட்சிகளின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்க எதை வேண்டுமானாலும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

    ரஜினிகாந்த் நான் எதிர்பார்த்தபடி அரசியல் பயணத்தை தொடங்குவார் என்பதை 100 சதவீதம் நம்புகிறேன். அதே நேரத்தில் அவர் ஒருபோதும் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டார்.

    நான் கடந்த 30 மாதத்தில் தொடர்ந்து அவரை சந்தித்து வருகிறேன். அவர் அரசியல் பயணத்தை தொடங்குவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    அவர் தனது கட்சி எந்த சாயத்தில் இருக்கும் என்பது சம்பந்தமாக அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு தமிழருவிமணியன் கூறினார்.
    Next Story
    ×