search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜான்பாண்டியன்
    X
    ஜான்பாண்டியன்

    உள்ளாட்சி தேர்தல் அறிவித்தவுடன் கூட்டணி பற்றி முடிவு - ஜான்பாண்டியன்

    உள்ளாட்சி தேர்தல் அறிவித்தவுடன் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.

    நெல்லை:

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீண்ட ஆண்டு காலமாக குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திர குலத்தான், வாதிரியான் ஆகிய 7 சமுதாய உட்பிரிவுகளை ஒன்று சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழக அரசு அரசாணை வெளியிடக் கோரி போராடி வருகிறோம். மேலும் இந்த பிரிவை பட்டியல் இனத்தில் இருந்து எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தை தொடங்குகிறோம். மேலும் ஊர்கள் தோறும் கருப்பு கொடி ஏற்றுவோம். இந்த அரசாணையை வெளியிடாவிட்டால் எங்களது போராட்டம் தீவிரப்படுத்தப்படும். இது மக்களுக்கான போராட்டம் என்பதால் வலுவடையும்.

    எடப்பாடி பழனிசாமி

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் சமுதாய மக்கள் அனைவரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பார்கள். இந்த கோரிக்கை தொடர்பாக விரைவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.

    அ.தி.மு.க. உடன் கூட்டணியில் இருந்தாலும், எங்களது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலின் போது தேர்தலை புறக்கணித்து எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம். உள்ளாட்சி தேர்தலில் த.ம.மு.க. போட்டியிடும். கூட்டணியா? அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்து தேர்தல் அறிவித்த உடன் பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்படும்.

    100 ஆண்டுகளுக்கு மேலான அயோத்தி பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். இது சமாதானத்துக்கு வழி வகுத்துள்ளது. இதனை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு சமூக நல்லிணக்கத்தோடு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×