search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    நாராயணசாமி மீது மத்திய அரசிடம் புகார் செய்வேன்- கவர்னர் கிரண்பேடி

    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் சிங்கப்பூர் பயணம் விதிமுறைகளை மீறியது என்றும், அனுமதி பெறாமல் சென்றுள்ளது குறித்து மத்திய அரசிடம் புகார் செய்ய உள்ளதாக புதுவை கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    • முதல்- அமைச்சர் நாராயணசாமியின் சிங்கப்பூர் பயணம் விதிமுறைகளை மீறியது. 
    • முதல்-அமைச்சர் நாராயணசாமி தனிப்பட்ட முறையில் மீண்டும் வெளிநாடு பயணம் சென்றுள்ளார். 
    • முதல்-அமைச்சர் நாராயணசாமி அனுமதி பெறாமல் சென்றுள்ளது குறித்து மத்திய அரசிடம் புகார் செய்ய உள்ளேன்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு முறை பயணமாக 4 நாட்கள் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

    கடந்த 6-ந் தேதி சிங்கப்பூர் சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ., அரசு செயலாளர் தேவேஷ்சிங், பிப்டிக் மேலாண் இயக்குனர் சத்திய மூர்த்தி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

    சிங்கப்பூரில் முகாமிட்டுள்ள நாராயணசாமி அங்கு பல்வேறு வர்த்தக தொழில் கூட்டமைப்பினரை சந்தித்து பேசி வருகிறார். அவர்களிடம் புதுவையில் தொழில் தொடங்க வரும்படி அழைப்பும் விடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் புதுவை கவர்னர் கிரண்பேடி முதல்- அமைச்சர் நாராயணசாமியின் சிங்கப்பூர் பயணம் விதிமுறைகளை மீறியது என்றும், அனுமதி பெறாமல் சென்றுள்ளது குறித்து மத்திய அரசிடம் புகார் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாராயணசாமி


    முதல்-அமைச்சர் நாராயணசாமி தனிப்பட்ட முறையில் மீண்டும் வெளிநாடு பயணம் சென்றுள்ளார். அவருடைய தனிப்பட்ட பயணத்தில் அரசு பணிகளை ஏன் செய்ய வேண்டும்? அதுபற்றிய விவரங்கள்கூட வேறு யாருக்கும் தெரியவில்லை.

    மத்திய அரசின் விதிப்படி வெளிநாட்டுக்கான தனிப்பட்ட பயணமாக இருந்தாலும், அரசில் பணிபுரியும் அனைவரும் தங்களை நியமனம் செய்யும் அதிகாரத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.

    அந்த வகையில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள் அவர்களை நியமனம் செய்யும் அதிகாரம் படைத்த ஜனாதிபதியிடம் அனுமதி பெற வேண்டும் என்பது விதி. ஆனால், முதல்-அமைச்சர், அமைச்சர் தற்போதைய பயணம் மற்றும் கடந்த கால பயணங்களுக்கு அனுமதி பெற்றனரா? என தெரியவில்லை.

    அவர்களது பயணம் விவரம், நாளிதழ்கள் மற்றும் வதந்திகள் மூலம் மட்டுமே தெரிய வந்துள்ளது. அதே போல் இலங்கைக்கு அடிக்கடி செல்லும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எத்தனை முறை அனுமதி பெற்றார்? இதுகுறித்து மத்திய அரசு அவரிடம் தகவல் கேட்டுள்ளது.

    நான் மாநில நிர்வாகி என்ற முறையில் அரசு ஊழியர்களின் துறை சார்ந்த வழக்குகளை கையாண்டு வருகிறேன். எந்த முன் அனுமதியும் பெறாமல் அதிகாரிகள் வெளிநாடு செல்வது ஒழுக்கமற்ற செயலாக கருதப்படுகிறது.

    நாராயணசாமி மற்றும் அமைச்சர் சிங்கப்பூர் பயணம் குறித்து கவர்னர் மாளிகைக்கு எந்த தகவலும் இல்லை. இது, மாநில பாதுகாப்பு மட்டுமின்றி முதல்-அமைச்சர், அமைச்சர் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனை. இதனால் இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

    வெளிநாடு செல்லும் போது தேவையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் ஒரு தனிப்பட்ட பயணத்தின் போது யார் அவர்களை அழைத்துள்ளார்கள்? நிதி ஆதாரம் எங்கிருந்து வருகிறது? என்பதை மத்திய அரசு அறிந்திருக்க வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×