search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    தொண்டி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை

    தொண்டி அருகே விவசாயி வீட்டுக்குள் பட்டப் பகலில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பெருமானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன். இவர் தனது குடும்பத்தினருடன் வயலுக்குச் சென்று விட்டார்.

    இதை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் பட்டப்பகலில் பாலசுப்பிரமணியன் வீட்டின் பின்புறக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    பிற்பகல் வீடு திரும்பிய சுப்பிரமணியன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை- பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக தொண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    கொள்ளையில் துப்பு துலக்க ராமநாதபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர் துணை கண்காணிப்பாளர் யூசுப் தலைமையில் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து பெருமானேந்தலில் உள்ள சுடுகாடு கண்மாய் வரை சென்று திரும்பியது. இன்ஸ்பெக்டர் நசீர் தலைமையிலான போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×