search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர் செல்வம்
    X
    ஓ.பன்னீர் செல்வம்

    10 நாள் பயணமாக ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா சென்றார்

    10 நாள் பயணமாக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக 10 நாட்கள் சென்று வந்தார்.

    இதேபோல் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டனர்.

    இன்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு அமெரிக்கா புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை வழியனுப்ப ஏராளமானோர் திரண்டு வந்து இருந்தனர்.

    விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்டச் செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், சோமசுந்தரம், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.கந்தன், வேளச்சேரி அசோக், நீலாங்கரை முனுசாமி, என்.சி.கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் வைரமுத்து, முன்னாள் கவுன்சிலர் குட்டி என்ற ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்தில் திரளாக நின்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மனைவி மற்றும் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி., நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

    சிகாகோ நகரம் சென்றடையும் ஓ.பன்னீர்செல்வம் நாளை மாலை முதல் நிகழ்ச்சியாக தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    10-ந் தேதி ‘குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ்-2019’ விழாவில் கலந்துகொள்கிறார். அந்த விழாவில் ‘இண்டர் நே‌ஷனல் ரைசிங் ஸ்டார் ஆப் தி இயர் - ஆசியா’ என்ற விருது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுகிறது.

    12-ந் தேதி சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் மாநில கவர்னர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களை சந்திக்க துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளார்.

    ‘குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ்-2019’ விழா மற்றும் இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க வாழ் தொழில்முனைவோர் சார்பில் நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.

    13-ந் தேதி, ஓ.பன்னீர்செல்வம் வாஷிங்டன் டி.சி. செல்கிறார். அங்கு அவருக்கு இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க பன்னாட்டு கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    14-ந் தேதி ஹூஸ்டன் நகருக்கு சென்று தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அங்குள்ள முக்கிய தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார்.

    15-ந்தேதி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான ‘எலெக்ட்ரானிக்ஸ் டோனர் போர்டை’ தொடங்கி வைக்கிறார். 16-ந் தேதி நியூயார்க் சென்று இந்திய-அமெரிக்க கலாசாரம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் 17-ந்தேதி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்புகிறார்.

    Next Story
    ×