search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசுக்கள் உற்பத்தி மையத்தின் அருகிலேயே காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
    X
    டெங்கு கொசுக்கள் உற்பத்தி மையத்தின் அருகிலேயே காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    டெங்கு கொசுக்கள் உற்பத்தி மையமான உழவர் சந்தை

    திண்டுக்கல் உழவர் சந்தை டெங்கு கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு திண்டுக்கல் நகரைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    கடந்த சில நாட்களாக வெங்காயம், தக்காளி மற்றும் பெரும்பாலான காய்கறிகள் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் உழவர் சந்தையை நோக்கி வரும் மக்கள் அதிகரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் உழவர் சந்தையில் மழை நீர், கழிவு நீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தி மையம் போல் செயல்பட்டு வருகிறது.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி அபராதம் விதித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் உழவர் சந்தைக்கு இது வரை ஏன்? ஆய்வுக்கு வரவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் ஏராளமான குப்பைகளும் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

    உணவுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வாங்கிச் செல்லும் மக்கள் நோய்களுக்கு ஆளாவதுடன் சுகாதாரமற்ற காய்கறிகளை வாங்கி சாப்பிட்டு மேலும் பல நோய்களுக்கு ஆளாகும் விபரீதமும் ஏற்பட்டுள்ளது.

    எனவே அதிகாரிகள் உரிய சோதனை நடத்தி கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்கவும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×