search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராம மக்கள் முற்றுகையிட்ட காட்சி.
    X
    கிராம மக்கள் முற்றுகையிட்ட காட்சி.

    புறம்போக்கு நிலத்தை அளக்க வந்த அரசு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

    புறம்போக்கு நிலத்தை அளக்க வந்த அரசு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குன்னம்: 

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிழுமத்தூர் கிராம மக்கள் கடந்த 4-ந்தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் கிழுமத்தூர் கிராமத்தில் மத்திய மாதிரி பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுமார் 5 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தை எங்கள் கிராமத்தின் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க இருப்பதாக தாசில்தார் கூறி வருகிறார்.

    அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு எங்கள் கிராமத்தில் வேறு புறம்போக்கு நிலம் ஏதும் இல்லாததால், பள்ளி அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எங்கள் கிராமத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, அஞ்சல் அலுவலகம், சமுதாயக்கூடம், மாணவர்கள் விடுதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை கட்டுவதற்கு பயன்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் சம்பந்தப்பட்ட இடத்தை அளப்பதற்காக மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, குன்னம் தாசில்தார் சித்ரா, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சர்வேயர்களுடன் வந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிழுமத்தூர் கிராமமக்கள் அந்த அதிகாரிகளை காரில் இருந்து இறங்க விடாமல் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது கிராம மக்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், எங்கள் கிராமத்தில் இருக்கிற புறம்போக்கு நிலம் இது மட்டும் தான், எனவே அந்த நிலத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது. எங்கள் கிராமத்திற்கு தேவையான அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு தான் பயன்படுத்த வேண்டும் என்றனர். இதையடுத்து நிலத்தை அளக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

    கிழுமத்தூர் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை, கிராமத்திற்கு தேவையான அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி குன்னம் தாசில்தார் அலுவலகம் முன்பு கிழுமத்தூர் கிராமமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×