
புதுவை கவர்னர் கிரண்பேடி முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையிலான மோதல் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
யூனியன் பிரதேசமான புதுவையில் யாருக்கு அதிகாரம்? என்பதில் தொடங்கிய மோதல் இதுவரை முற்று பெறவில்லை. அதிகாரம் தொடர்பான பிரச்சினை நீதிமன்றம் சென்றது.
இதில், சென்னை ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து கவர்னர் கிரண்பேடிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சகம் மேல் முறையீடு செய்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மீறி கவர்னர் அரசின் அன்றாட நிகழ்வில் தலையிடுகிறார் என்றும், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார், போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிக்கிறார் என்றும் நாராயணசாமி பேட்டி அளித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தவறான வார்த்தைகளை பயன்படுத்தும்போது மட்டும் விதி சரியாக பொருந்துகிறது. சட்ட விதிகளில் பொய்க்கு இடமில்லை. ஆனால், இவற்றை செய்துகொண்டு இருப்பது யார்?
கவர்னர் மாளிகைக்கு வந்து கவர்னரை சந்திக்க வரும் அமைச்சர்களை வர விடாமல் தடுத்துக்கொண்டு இருப்பது யார்? இதனால் இரவு நேரங்களில் அமைச்சர்கள் இருசக்கர வாகனங்களில் முக்காடு போட்டு வந்து சந்தித்து விட்டு நாங்கள் வந்ததை தெரிவிக்க வேண்டாம் என கூறி செல்கின்றனர். இது, எந்த வகையில் சட்டவிதியில் பொருந்துகிறது.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.