
கிருஷ்ணகிரி, ராஜாஜி நகர் 5-வது கிராஸ் தெருவை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 75). இவர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் சசிகுமார்(39).
இவர் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடிக்கு அடிமையாகி கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சசிகுமார் குடிப்பழக்கத்தால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அடைக்க முடியாமல் தனது தந்தையான தங்கவேலுவிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தங்கவேல் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
பின்னர் தங்கவேல் இரவு தூங்க சென்றுள்ளார். தனது தந்தை பணம்தர மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த சசிகுமார், தூங்கிக்கொண்டிருந்த தந்தையின் தலையில் வீட்டில் இருந்த அம்மிகல்லை எடுத்து போட்டுள்ளார். இதில் தலை சிதைந்த நிலையில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், தங்கவேல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சசிகுமாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.