search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் கலெக்டர் அன்பழகன்
    X
    கரூர் கலெக்டர் அன்பழகன்

    கலெக்டர்கள் என்ன, சரவண பவன் சர்வர்களா?- சமூக வலைத்தளத்தில் வைரலாகும் கரூர் கலெக்டர் ஆடியோ

    ஆழ்துளை கிணறை மூட வேண்டுகோள் விடுத்தவரிடம், கரூர் கலெக்டர் கறாராக பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
    கரூர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் கடந்த மாதம் 25-ந்தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அவனை உயிருடன் மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது. இது தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதனை உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் குளித்தலை அருகே உள்ள தரகம்பட்டி செந்திநத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, தங்கள் பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றினை மூடுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதில் கலெக்டருக்கும் வாலிபருக்கும் இடையே தொடங்கிய உரையாடல் வாக்குவாதமாக மாறியது. இந்த உரையாடல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

    வாலிபர்: சார், நான் செந்திநத்தம் பகுதியில் இருந்து பேசுகிறேன்.

    வாலிபர்: குளித்தலை அருகே உள்ள தரகம்பட்டி.

    கலெக்டர்: உங்க பகுதியில் பி.டி.ஓ. என்று ஒருவர் இருப்பது தெரியுமா?. இல்லை அவருடன் பேசுவதை தரக்குறைவாக நினைக்கிறீர்களா?

    வாலிபர்: மணப்பாறையில் குழந்தை விழுந்த போதே போர்வெல்லை மூட சொன்னோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கலெக்டர்: இன்பார்ம் பண்ணிட்டீங்க, நேரில் போய் பார்த்தீர்களா?

    வாலிபர்: நேரில் போய் பார்த்தோம். ஆபீசர் இல்லை.

    கலெக்டர்: உண்மையிலேயே அக்கறை இருந்தால் ஆபீசரை போய் பாருங்கள். நான் மூட சொல்கிறேன்.

    வாலிபர்: என்ன சார்? அக்கறை இருந்தாலா?

    கலெக்டர்: ஆமாங்க, உண்மையில் அக்கறை இருந்தால் நேரில் போய் பாருங்கள். கலெக்டர்கள் எல்லாம் சரவணபவன் ஓட்டல் சர்வர் என்று நினைத்தீர்களா?

    இவ்வாறு அந்த உரையாடல் நீள்கிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இது தொடர்பாக கலெக்டர் அன்பழகன் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில் ஆழ்துளை கிணற்றை மூட வலியுறுத்தியவரை திட்டியதாக வெளியான ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல, செம்பியநத்தம் இளைஞரிடம் நான் பேசவும் இல்லை என்று அதில் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து ஆடியோ வெளியிட்ட வாலிபர் யார் என்று கரூர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    Next Story
    ×