search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருங்கைக்காய்
    X
    முருங்கைக்காய்

    வெங்காயத்தை தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் உயருகிறது

    வெங்காயத்தை தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    தண்ணீர் தட்டுப்பாடு வந்த நேரத்தில் புலம்பாத மக்கள் கூட, தற்போது வெங்காய விலையை எண்ணி புலம்பி தவித்து வருகிறார்கள். அந்தளவு வெங்காயத்தின் விலை ‘டாப்’ கியரில் உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் பல்லாரி எனப்படும் நாசிக் வெங்காயம் ரூ.75 வரை (ஒரு கிலோ) விற்பனை ஆனது.

    இந்த நிலையில் ரூ.5 விலை உயர்ந்து, நேற்று ரூ.80-க்கு வெங்காயம் விற்பனை ஆனது. இன்னும் சில நாட்களில் வெங்காயத்தின் விலை சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சாம்பார் வெங்காயத்தின் விலையும் ரூ.100-ஐ எட்டியுள்ளது.

    இதுபோதாதென்று ‘நானும் வருகிறேன் பார்...’ என்ற ரீதியில் முருங்கைக்காய் விலையும் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த வாரத்தில் ரூ.90 வரை விற்பனை ஆன ஒரு கிலோ முருங்கைக்காய், கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்து நேற்று ரூ.140 வரை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட் விலையை காட்டிலும் சூப்பர் மார்க்கெட்கள், தெருக்கடைகள், மளிகை கடைகளில் ரூ.160 முதல் ரூ.170 வரை முருங்கைக்காய் விற்பனை ஆகிறது. ஒரு முருங்கைக்காய் மட்டுமே ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கனவே உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் நிலையில் வெங்காயம் விலை இருந்து வருகிறது. இந்த நிலையில், எகிறி வரும் முருங்கைக்காய் விலை இல்லத்தரசிகளை தவிக்க வைத்திருக்கிறது.

    இதுகுறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் எம்.அப்துல்காதர் கூறியதாவது:-

    வெங்காயத்தை பொறுத்தவரையில் விளைச்சல் பாதித்த நிலையில், தற்போது விவசாயிகள் கையிருப்பில் உள்ள சரக்குகளே விற்பனைக்கு வருகிறது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ.90 முதல் ரூ.100 வரையிலும், சாம்பார் வெங்காயம் ரூ.110 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முருங்கைக்காயின் விலையும் உயர்ந்து வருகிறது. அதிக லாரிகள் மூலம் வெங்காயம்-முருங்கைக்காய் கூடுதல் வரத்துக்காக முயற்சித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×