search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த காற்றுக்கு சாய்ந்து விழுந்த வாழை மரங்களை படத்தில் காணலாம்.
    X
    பலத்த காற்றுக்கு சாய்ந்து விழுந்த வாழை மரங்களை படத்தில் காணலாம்.

    சூலூரில் பலத்த மழைக்கு 500 வாழைகள் சேதம்

    சூலூரில் பலத்த மழைக்கு 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    சூலூர்:

    கோவையில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. இதனால் இதமான கால நிலை நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    இதனால் அவினாசி சாலை, 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, ரெயில்நிலையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    சூலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 2 மணி நேரமாக மழை பெய்தது. அப்போது சூலூர் போலீஸ் நிலையத்தில் பலத்த சத்தம் கேட்டது.

    இது குறித்து போலீஸ் நிலையத்தில் உள்ளவர்களிடம் விசாரித்ததில், சுமார் இரவு 12 மணியளவில் பலத்த சத்தம் கேட்டது. அந்த சத்தத்திற்கு பின் போலீஸ் நிலையத்தில் இருந்த வயர்லெஸ் கருவி வேலை செய்யவில்லை.

    மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டரில் புகை வந்தது. போலீஸ் நிலையத்திற்கு வெளியில் நின்ற மின் கம்பத்தின் கம்பிகள் மரத்தில் உரசியதால் பட்டாசு வெடிப்பது போல் சத்தம் கேட்டது என்றனர்.

    சூலூர் சுற்றுப்புற பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக கண்ணம்பாளையத்தில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதம் அடைந்தன.

    மேலும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதேபோல் கோவை புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், இடிகரை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சூலூர்-62, கோவை விமான நிலையம்-52.4, கோவை தெற்கு-32, வேளாண்மை பல்கலைக் கழகம்-20, ஆழியாறு-12.4, பொள்ளா ச்சி-7, பெரிய நாயக்கன்பாளையம்-3 என மொத்தம் கோவை மாவட்டத்தில் 188.80 மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×