search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்
    X
    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்

    அந்தமான் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு

    அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இது இரண்டு அல்லது 4 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. ‘மகா’ புயல் என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் இன்று காலை 5.30 நிலவரப்படி அதி தீவிர புயலாக மாறியுள்ளது.

    குஜராத் ஹவலில் இருந்து 620 கி.மீ. தொலைவில் மேற்கு-தென்மேற்கு திசையில் அது நிலை கொண்டுள்ளது. நாளை 5-ந்தேதி காலை அது மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

    இந்த அதி தீவிர புயல் குஜராத் டையூக்கும் போர் பந்தலுக்கும் இடையே 6-ந்தேதி இரவு அல்லது 7-ந்தேதி மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு மழையோ புயல் பாதிப்போ இருக்காது.

    இந்த நிலையில் இன்று காலை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு அல்லது 4 நாட்களில் மத்திய கிழக்கு கடலில் காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

    மழை (கோப்புப்படம்)

    தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும், நாளையும் அந்தமான் கடல் பகுதிகளில் 6, 7, 8-ந்தேதிகளில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறை காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சூலூர், ராஜபாளையம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    டெல்லியில் உள்ள காற்று மாசுவினால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×