
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தென் மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவை தந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் கை கொடுத்த பருவமழை காரணமாக கண்மாய், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது.
3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த மழையால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது.
ராஜபாளையத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்தால் சங்கரன்கோவில் ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தது.
மழையால் அதில் தண்ணீர் நிரம்புவதால் சங்கரன் கோவில் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெல்லை, நாகர்கோவில், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்சில் சென்ற பயணிகள் அவதியடைந்தனர்.
ராஜபாளையம் புதிய பஸ் நிலையம், சங்கரன் கோவில் ரோட்டில் தோண்டப்பட்டு இருந்த பள்ளங்களில் கார், அரசு பஸ், கண்டெய்னர் லாரி சிக்கியது.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அய்யனார் ஆறு, பேயனாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.