
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கற்பக நாதர்குளம் தெற்கு பண்ணைசேத்தி பகுதியை சேர்ந்தவர் வாள முத்து(வயது85)
இவர் கடந்த சில நாட் களுக்கு முன்பு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் நோய் தாக்கம் காரணமாக அவர் கடந்தவாரம் இறந்தார்.
இதனை தொடர்ந்து அவரது மகன் அன்பு ராஜன்(50), என்பவருக்கும் அம்மை நோய்தொற்று பரவியது. இதில் பாதிக்கப்பட்ட அவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்தார்.
அம்மை நோய் தாக்கி அடுத்தடுத்து தந்தை- மகன் பலியானதால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது.
இந்த நிலையில் வாளமுத்துவின் பேரன் பேரழகனுக்கும்(20) அம்மை நோய் பரவியுள்ளது. வாலிபர் பேரழகன் வேதாரண்யம் அடுத்த செம்போடை தனியார் கல்லூரியில் தொழிற்கல்வி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது அம்மை நோய் தாக்கியுள்ளதால் கடந்த ஒருவாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் அம்மை நோய் பரவி இருப்பதால் அவர்களும் வீட்டில் முடங்கி உள்ளனர்.
இதனால் தொடர்ந்து அம்மை நோய் பரவி வந்ததால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் வட்டார சுகாதாரத்துறை சார்பில் அரசு டாக்டர்கள் திவ்ய பாரதி, அழகானந்தம் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் அப்பகுதியில் வீடு-வீடாக சென்று நோய் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் கற்பகநாதர் குளம் மற்றும் சுற்று பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.