search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பழனி பஸ்நிலைய ஓட்டல்களில் தரமற்ற உணவு விற்பனை - வாட்சப்பில் வைரலாக பரவும் வீடியோ

    பழனி பஸ்நிலைய பகுதியில் உள்ள ஓட்டல்களில் சுகாதாரம் மற்றும் தரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு திருவிழா மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஆகையால் பழனி அடிவாரம் மற்றும் பஸ்நிலைய பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், அலங்கார பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள கடைகளில் உணவு உண்டு, தங்களுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் பழனி பஸ் நிலையம், அடிவாரம், குளத்து ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையிலும், தரமற்றதுமான வகையில் உணவு பொருட்கள் தயார் செய்யப்படுவதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக பஸ்நிலையம் மற்றும் அடிவாரம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் தயார் செய்யப்படும் உணவு வகைகள் பெரும்பாலும் திறந்தநிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றில் தூசுக்கள் நேரடியாக விழும் நிலை உள்ளது. இதுகுறித்து பக்தர்கள் ஓட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்தாலும் அவர்கள் அதுகுறித்து கண்டுகொள்ளாமல் உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் பழனி பஸ்நிலையத்திலுள்ள ஒரு தனியார் ஓட்டலில் வழங்கப்பட்ட சாம்பார் தரமில்லாத வகையில் இருந்ததாகவும், இதனால் அங்கு சாப்பிட சென்ற வாடிக்கையாளர் இதுகுறித்து கேட்பது போன்ற வீடியோ தற்போது ‘வாட்ஸ் அப்’பில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பழனியின் அடையாளமாக நிகழ்கிற முருகன் கோவிலை சுற்றிலும் உள்ள கடைகளே பழனி நகரின் வணிகத்தை தீர்மானிக்கிறது. எனவே அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தரம் மற்றும் சுகாதாரமான முறையில் உணவு விற்பனை செய்யப்பட வேண்டும்.

    இங்குள்ள பெரும்பாலான கடைகளில் உணவுப்பொருட்கள் தரமற்ற நிலையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதால் அதை வாங்கி உண்ணும் பக்தர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யும் ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×