search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித் நினைவு கல்வெட்டை கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்தார்.
    X
    ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித் நினைவு கல்வெட்டை கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்தார்.

    நான் சுஜித் பேசுகிறேன்- நினைவு கல்வெட்டு திறப்பு

    ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுஜித் நினைவாக, திருவண்ணாமலை அருகே கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானான்.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவண்ணாமலை அடுத்த தென்அரசம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணறு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டார்.

    அப்போது சுஜித் பேசுகிறேன் என்ற நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார்.

    அதில் நான் சுஜித் பேசுகிறேன், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் எனது தாயின் கருவறையில் பிறந்து 2 வயதில் ஆழ்துளை கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்து விட்டது.

    இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும், என்னை போல் 80 மணி நேரம் மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகவும் கொடுமையானது. நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனிவரும் காலங்களில் ஆழ்துளை கிணறுகளை திறந்து வைக்காமல் என்னை போல் உள்ள குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். இவ்வாறு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் உருவப்படத்திற்கு கலெக்டர் கந்தசாமி மாணவர்களுடன் சேர்ந்து மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.

    தொடர்ந்து பள்ளிக்கு அருகே இருந்த பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு மழைநீர் சேமிக்கும் இடமாக மாற்றப்பட்டு பாதுகாப்பாக மூடப்பட்டது.

    Next Story
    ×