search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த பெல் கூட்டுறவு வங்கியை படத்தில் காணலாம்.
    X
    கொள்ளை நடந்த பெல் கூட்டுறவு வங்கியை படத்தில் காணலாம்.

    திருச்சி பெல் வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை- ஊழியர்கள் 7 பேரிடம் போலீசார் விசாரணை

    திருச்சி பெல் வங்கியில் ரூ.1.50 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை உள்ளது. 13 ஆயிரம் ஊழியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.

    இந்த ஊழியர்களுக்கு சம்பள பணம் மற்றும் கடன் உள்ளிட்ட பணம் பரிவர்த்தனைக்காக தொழிற்சாலை வளாகத்திலேயே பெல் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி உள்ளது.

    இந்த வங்கியின் மேலாளராக ரவிச்சந்திரன் உள்ளார். கேஷியராக லதா உள்ளார். 20 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த வங்கியில் நேற்று முன்தினம் (31ந்தேதி) இரவு 8 மணிக்கு வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையன் கேஷியர் இருக்கை அருகே சூட்கேசில் இருந்த ரூ.1 கோடியே 43 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றான்.

    நேற்று காலை 9 மணிக்கு ஊழியர்கள் வேலைக்கு வந்த போது தான் ஜன்னல் கம்பி உடைந்திருப்பதை பார்த்து கொள்ளை நடந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து பெல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வங்கியில் விசாரணை நடத்தினர். மோப்பநாய் அர்ஜுன் கொள்ளை நடந்த வங்கியில் துப்பு துலக்கியது. வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது வங்கிற்குள் கொள்ளையன் ஜன்னல் கம்பியை உடைத்து 7.58 மணிக்கு உள்ளே புகுந்ததும் பணத்தை அங்கிருந்த சூட்கேசில் இருந்து எடுத்து அவன் கொண்டு வந்த பையில் வைத்து கொண்டு 8.05 மணிக்கு மீண்டும் ஜன்னல் வழியாக தப்பி சென்றது பதிவாகி இருந்தது.

    கொள்ளையன் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை மறைத்து துணியை கட்டியிருந்தான். கைகளில் கையுறை அணிந்திருந்தான். 25 வயது முதல் 30 வயது வரை அவனுக்கு இருக்கும் என கூறப்படுகிறது.

    கொள்ளையடிக்கப்பட்ட பணம் பெல் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் வழங்குவதற்காக திருச்சி வங்கியில் இருந்து எடுத்து வரப்பட்ட பணமாகும். அந்த பணத்தை பெல் கூட்டுறவு வங்கி கணக்காளர் ரவிச்சந்திரன் வியாழக்கிழமை மாலை எடுத்து வந்துள்ளார்.

    பெல் கூட்டுறவு வங்கி லாக்கர் வேலை செய்யாததால் அந்த பணம் இருந்த சூட்கேசை தனது மேஜைக்கு அருகில் வைத்துள்ளார். ரூ.7 லட்சத்தை மட்டும் எடுத்து வங்கியில் இருந்த அலமாரியில் வைத்துள்ளார்.

    ஆனால் அந்த ரூ. 7 லட்சத்தை மட்டும் கொள்ளையன் எடுத்து செல்லவில்லை. அன்று மாலை 6.28மணிக்கு வங்கி கணக்காளர் ரவிச்சந்திரன் கடைசியாக வங்கியில் இருந்து வெளியில் சென்று உள்ளார். அதன்பிறகு1.30 மணிநேரம் கழித்து கொள்ளையன் 7.58 மணிக்கு உள்ளே புகுந்து 5 நிமிடத்தில் வந்த வேலையை முடித்து வெளியேறி உள்ளான். எனவே இதில் தெரிந்த நபரே கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக சந்தேகம் ஏற்பட்ட 6 வங்கி ஊழியர்களிடம் திருச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் மற்றும் பெல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி கணக்காளர் ரவிச்சந்திரன், கேஷியர் லதா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக ஒப்பந்த தொழிலாளி ஒருவரது மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×