search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    தி.மு.க. உயர் பதவிகளில் விரைவில் மாற்றம் -பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்

    சென்னையில் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் கட்சியின் உயர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், துரைமுருகன் பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தற்போது 96 வயது ஆகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வயோதிக உடல் நலக்குறைவு காரணமாக அவர் தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டதுதான் அவர் பங்கேற்ற கடைசி தி.மு.க. கூட்டமாகும். அதன் பிறகு அவரால் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்து கட்சிப் பணிகளில் ஈடுபட முடியவில்லை. என்றாலும் வீட்டில் இருந்தபடி அவர் முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்து வருகிறார்.

    தி.மு.க.வின் சட்ட விதிகளின்படி, பொதுச்செயலாளர் பதவி என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். தி.மு.க.வின் அனைத்து முக்கிய முடிவுகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அது போல கட்சி எடுக்கும் முக்கிய முடிவுகள் அனைத்துக்கும் பொதுச்செயலாளரின் உரிய அனுமதியைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.

    பொதுச்செயலாளரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அந்த பதவியை வேறு யாரிடமும் ஒப்படைக்காமல் அன்பழகனிடம் தொடர்ந்து இருக்கும் வகையில் கருணாநிதி நீட்டிப்பு செய்து வந்தார். கருணாநிதி மறைவுக்குப் பிறகும் அன்பழகன் தொடர்ந்து பொதுச்செயலாளராக உள்ளார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக அவரால் விரைந்து செயலாற்ற முடியாத நிலை உள்ளது.

    எனவே தி.மு.க.வின் முக்கியத்துவம் வாய்ந்த பொதுச்செயலாளர் பதவி மூத்த தலைவர்களில் ஒருவருக்கு வழங்கப்படும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. பொதுக்குழுவில் கட்சி சட்ட விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. கட்சியில் உறுப்பினராக இல்லாத வெளிநபர்களும் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. அனுமதிக்கலாம் என்று கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில எம்.பி.க்களின் பதவியில் சர்ச்சை எழுந்துள்ளதால் இந்த விதி திருத்தம் செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

    மேலும் பொதுச்செயலாளர் பதவியை துரைமுருகன் ஏற்கும் தீர்மானம் பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் இதை உறுதி செய்தார். அவர் கூறியதாவது:-

    தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்


    தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அதனால் அவருக்கு பதில் கட்சியின் மூத்த நிர்வாகியை பொதுச்செயலாளராக நியமிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அந்த வகையில் துரைமுருகன் பொதுச்செயலாளராக வாய்ப்பு உள்ளது.

    பொருளாளர் பதவிக்கு எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இதில் டி.ஆர்.பாலு பொருளாளர் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. ஆ.ராசா துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. இதை மறுத்துள்ளார். இப்போதைக்கு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

    தி.மு.க. தலைவராக கருணாநிதியும், பொதுச்செயலாளராக அன்பழகனும் வேறு எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு “இரட்டைக்குழல் துப்பாக்கி” என்று புகழப்பட்டு பொறுப்புகளை சுமந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×