search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் இந்த பகுதிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து- பீதியை ஏற்படுத்தும் ஆய்வு முடிவுகள்

    இன்னும் 30 ஆண்டில் சென்னை நகரின் பெரும்பகுதி கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சென்னையில் பாதிக்கக்கூடிய இடங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
    சென்னை:

    உலக அளவில் மக்கள் எரிக்கக் கூடிய பொருட்களில் இருந்து ஏராளமான கார்பன்கள் வெளியேறி வான் மண்டலத்தில் கலக்கிறது.

    இதன் காரணமாக உலகில் வெப்பமயம் அதிகமாகி பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. மேலும் இது பருவநிலை மாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதன் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்து தொடர்ந்து கடல் அரிப்புகள் அதிகமாகி வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த காலநிலை மாற்ற ஆய்வு மையம் சர்வதேச அளவில் புதிய ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை தயார் செய்துள்ளது.

    அதில் உலகில் ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவிற்கு வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கணித்து அதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. அழிவுநிலை எந்த வகையில் இருக்கும் என்பதை வரைபடமாகவும் தயாரித்து இருக்கிறது.

    அதில், ஆசியாவில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா, தாய்லாந்து, வங்காளதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நாடுகளில் உள்ள கடலோர நகரங்கள் மோசமான பாதிப்பை சந்திக்க கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னையும் ஒன்று.

    2050-ம் ஆண்டு வாக்கில் சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், கொளத்தூர், புரசைவாக்கம், பெருங்குடி பகுதிகள் கடல் நீரின் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கடலுக்கு அருகில் அமைந்துள்ள மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் போன்ற பகுதிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இத்தனைக்கும் கடற்கரையில் இருந்து பெரம்பூர் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அந்த பகுதி பாதிக்கப்படும் என்று கூறப்படும் அதே நேரத்தில் 2 கிலோ மீட்டர் அருகிலேயே உள்ள மயிலாப்பூருக்கு பாதிப்பு இருக்காது என்று அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

    ஏன் என்றால் மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் போன்ற பகுதிகள் மேடான இடத்தில் உள்ளன. அதே நேரத்தில் பெரம்பூர், கொளத்தூர், பெருங்குடி போன்ற தூரத்து பகுதிகள் தாழ்வான பகுதியில் உள்ளன.

    அதேபோல, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் போன்ற பகுதிகளும் தாழ்வான இடத்தில் இருக்கின்றன. எனவே அந்த பகுதிகளுக்கு ஆபத்து என்று கூறப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    கடல்நீர் மட்டம் உயரும் போது, தாழ்வான இடத்தை நோக்கி தண்ணீர் புகும். இதனால் சென்னையில் பெரும் பகுதிகள் 2050-ம் ஆண்டு வாக்கில் மூழ்கி விடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் கடல்நீர் மட்டும் 3 மி.மீட்டர் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இன்னும் 30 ஆண்டில் 9 செ.மீட்டர் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துவிடும். அவ்வாறு உயரும்போது சென்னை நகரில் உள்ள பல பகுதிகளுக்கு எளிதாக கடல்நீர் வரும் நிலை இருக்கிறது.

    எனவே சென்னை நகரத்தின் பெரும்பகுதி மக்கள் அந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பெரும்பாலான கட்டிடங்களை கைவிட வேண்டிய நிலையும் உருவாகும்.

    இது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    இதுசம்பந்தமாக சென்னையை சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறும் போது, கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசு நிர்வாகங்கள் இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஓரளவு கடல் அரிப்பை தடுக்க முடியும் என்று கூறினார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜியாலஜி துறை தலைவர் பேராசிரியர் இளங்கோ கூறும் போது, 30 ஆண்டில் 9 செ.மீட்டர் நீர்மட்டம் உயரும் என்பது பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. ஆனால் அடுத்த 100 ஆண்டில் 20 மீட்டர் நீளத்திற்கு கடற்கரை பகுதி கடலுக்குள் சென்றுவிடும்.

    கடற்கரையில் நீர் அரிப்பு என்பது தினமும் நடக்கும் செயலாகவே இருந்து வருகிறது. மக்கள் உரிய மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால் அது பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று கூறினார்.

    மற்றொரு நிபுணர் ரமேஷ் ராமச்சந்திரன் கூறும்போது, கடற்கரையையொட்டி உள்ள தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த தாழ்வான நிலப்பரப்பு கடற்கரையில் இருந்து வெகுதூரத்தில் இருந்தாலும் கூட அங்கும் தண்ணீர் புகுந்துவிடும் என்று கூறினார்.

    இவ்வாறு கடல்நீர் புகும் போது, சென்னை நகரில் குடிநீர் பிரச்சனை பெரிய அளவில் வெடிக்கும் என்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் துறைமுகம், சாலைகளும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே கடற்கரை அரிப்பினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மத்திய அரசு ஏற்கனவே கடற்கரை மேலாண்மை திட்டத்தை உருவாக்கி உள்ளது. அதில் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக குஜராத், ஒடிசா, மேற்குவங்களாத்தில் இதன் பணிகள் மேற்கொள்ள உள்ளன. அடுத்ததாக அந்தமான், லட்சத்தீவுகளில் பணிகள் நடக்க உள்ளன. பின்னர் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    மாங்குரோவ் காடுகளை வளர்ப்பது, செயற்கை பவளப்பாறைகளை உருவாக்குவது, மணல் பகுதியை மேம்படுத்துவது என பல்வேறு கட்ட பணிகளை செய்ய உள்ளனர்.

    குஜராத்தில் தொடங்கி மேற்குவங்காளம் வரை 78 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கடற்கரை பகுதியாக உள்ளது. இந்த பகுதிகள் அனைத்தையும் கேமரா படம் மூலம் பதிவு செய்து தாழ்வான பகுதியை கண்டுபிடித்துள்ளனர். அதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×