search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமராஜர் அணை
    X
    காமராஜர் அணை

    ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் 14 அடியாக உயர்வு

    ஆத்தூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை கொட்டியதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலையில் ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் 14 அடியை எட்டியது.
    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் காமராஜர் அணை உள்ளது. ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த அணைக்கு வருகிறது. ஆத்தூர் காமராஜர் அணைக்கு தண்ணீர் வருவதற்காக இயற்கையாகவே மலையில் நீர்வரத்து வாய்க்கால்கள் அமைந்துள்ளன.

    24 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் அக்கரைப்பட்டி ஆத்தூர், சீவல்சரகு, வீரக்கல், வக்கம்பட்டி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 3 முறை அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பண்ணைக்காடு, தடியன்குடிசை, ஆடலூர், பன்றிமலை மலைப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் காமராஜர் அணைக்கு நீர்வரத்து வரவில்லை. இதனால் அணையின் தண்ணீர் மட்டம் குறைந்து அணை குட்டை போல் காட்சியளித்தது.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆத்தூர் அணைக்கு நீர்வர தொடங்கியது. இதன் காரணமாக அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இதனிடையே மகா புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. ஆத்தூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை கொட்டியதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலையில் ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் 14 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 65 கன அடி தண்ணீர் வருகிறது. அணை நிரம்பி வருவது திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. எனினும் அணையில் நீர்வரத்து பகுதிகளில் சிலர் தடுப்பணை கட்டி தண்ணீரை தடுத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஏற்கனவே விவசாயிகள் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் குடிமராமத்து பணி மேற்கொண்டுள்ள நிலையில் அணை நீரை சட்டவிரோதமாக தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

    Next Story
    ×