search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசு
    X
    டெங்கு கொசு

    திண்டுக்கல் மாவட்டத்தில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 16 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சலை தடுக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    திண்டுக்கல், பழனி, நத்தம் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட வர்களுக்கு பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பூங்கோதை கூறியதாவது:-

    கடந்த 1-ந் தேதி முதல் இன்று வரை திண்டுக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 847 பேர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களில் 438 பேர் திண்டுக்கல், பழனி, நத்தம் அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இவர்களில் 38 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் குணமாகி வீடு திரும்பினர். இதில் 2 பேர் மட்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கும் உரிய சிகிச்சைக்கு பின் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×