search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேணுகா அவரது கணவர் நாகேந்திரன் மற்றும் குழந்தைகளுடன் உள்ள படம்.
    X
    ரேணுகா அவரது கணவர் நாகேந்திரன் மற்றும் குழந்தைகளுடன் உள்ள படம்.

    8 வயது மகள் வெளியிட்ட பகீர் தகவல்- மனைவியை எரித்துக் கொன்றதாக ராணுவ வீரர் மீது புகார்

    தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் குஜராத்தில் தன் மனைவியை எரித்துக் கொன்றதாக அவர்களின் 8 வயது மகள் கூறியதையடுத்து, கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மங்கலாபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 65). தமிழக விவசாய சங்க தலைவர். இவரது 3-வது மகள் ரேணுகா (27). இவருக்கும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் (30) என்பவருக்கும் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு யோகிஸ்ரீ (8), தான்யஸ்ரீ (2) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    நாகேந்திரன் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். அவர்கள் குடும்பத்துடன் குஜராத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி ரேணுகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக ஏழுமலைக்கு தகவல் வந்தது. அவர் அங்கு சென்று ரேணுகாவின் உடலை அடக்கம் செய்வதற்காக கிருஷ்ணாபுரத்திற்கு கொண்டுவந்தார்.

    இந்த நிலையில் அவரது பேத்தி யோகிஸ்ரீ அம்மா மீது அப்பா மண்எண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை, இது குறித்து புகார் அளிப்பதற்காக தனது பேத்தி யோகிஸ்ரீ மற்றும் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் கந்தசாமியை சந்தித்து மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கலெக்டரிடம் ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுமி யோகிஸ்ரீயுடன் புகார் மனு அளிக்க வந்த காட்சி.

    எனக்கு 4 மகள்கள். இதில் 3-வது மகள் ரேணுகாவை கடந்த 7.6.2012 அன்று கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் நாகேந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தேன். நாகேந்திரன் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். எனது மகளும் அவருடன் அங்கு தங்கி வசித்து வந்தார். இவர்களுக்கு யோகிஸ்ரீ (8), தான்யஸ்ரீ (2) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    நாகேந்திரன் வரதட்சணை கேட்டு எனது மகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கடந்த 27-ந்தேதி எனது தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில் உங்களது மகள் ரேணுகா சிலிண்டர் வெடித்து தீக்காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் உள்ளார் என்றார். நான் எனது குடும்பத்துடன் பதறியடித்து கொண்டு குஜராத் சென்றேன். அங்கு எனது மகள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும், அதில் அவர் இறந்து விட்டதாகவும் கூறினர். பின்னர் நான் எனது மகளின் உடலை கிருஷ்ணாபுரத்துக்கு கொண்டு வந்தேன்.

    இங்கு வந்தபோது எனது பேத்தி யோகிஸ்ரீ எங்களிடம் அம்மா மீது அப்பா மண்எண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறினாள். இதைக்கேட்டதும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ‘குஜராத்தில் எனது மகள் பிரேத பரிசோதனை அறிக்கையை காண்பித்ததால் நாங்கள் சந்தேகம் அடையவில்லை. இங்கு வந்த எனது பேத்தி கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். என் மகள் சாவுக்கு கணவர் நாகேந்திரன் காரணம் என்றால் அவரை கைது செய்ய வேண்டும்’ என்றார் ஏழுமலை.

    மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு வனிதாவிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் ரேணுகாவின் உடல் நேற்று மாலை கிருஷ்ணாபுரம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×