search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் சிலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி. மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்த காட்சி.
    X
    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் சிலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி. மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்த காட்சி.

    சுஜித் மீட்புப்பணி போல் டாக்டர்கள் போராட்டத்திலும் அரசு மெத்தனப்போக்கு- திருநாவுக்கரசர் எம்.பி.

    சுஜித் மீட்பு பணியில் காட்டிய மெத்தனப் போக்கை டாக்டர்கள் போராட்டத்தில் அரசு காட்டக்கூடாது என்று திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    இந்திராகாந்தி நினைவுநாளையொட்டி திருச்சி புத்தூரில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். திருநாவுக்கரசர் எம்.பி., கலந்து கொண்டு இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுஜித் மரணம், தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்து மக்களிடையேயும் மிகப்பெரிய வருத்தம், பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி, பத்திரிகைகளில் சம்பவத்தை பார்த்தவர்கள் கலங்கி போனார்கள். சுஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் உயிருடன் மீட்க முடியவில்லை. நவீன கருவிகள் கண்டு பிடித்திருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்காது. சீனாவில் 300 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையை 3 மணிநேரத்தில் மீட்டுள்ளனர். சுஜித் மீட்பு பணியில் ஏற்பட்ட தோல்வியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் குறைகளை கூறத்தான் செய்வார்கள். அதற்கு கோபப்படாமல் சரியான பதிலை அளிக்க வேண்டும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அதற்கான விதிகளை கடுமையாக்க வேண்டும்.

    ஆழ்துளை கிணறு தோண்டி, தண்ணீர் இல்லாத கிணறுகளை மூட வேண்டும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மீட்பு பணிக்காக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை என முக்கிய இடங்களில் மீட்பு மையம் அமைக்க வேண்டும். முதல்வர் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதை சொல்ல வேண்டுமே தவிர, கடந்த காலங்களில் நடந்ததை சொல்லக்கூடாது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை படத்தில் காணலாம்.


    டாக்டர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் அவர்களை சந்தித்து பேசி குறைகளை தீர்க்க வேண்டும். டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சைகள் நடைபெறாமல் உள்ளது. சுஜித் மீட்பு பணியில் காட்டிய மெத்தனப் போக்கை டாக்டர்கள் போராட்டத்தில் காட்டக்கூடாது. உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×