search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    டாக்டர்கள் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்க்காது- முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை

    மக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பவர்கள், பணிக்கு வரமாட்டோம் என பிடிவாதமாக இருந்தால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
    சேலம்:

    ஓமலூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி: மருத்துவர்கள் போராட்டம் 7-வது நாளாக நீடிக்கிறதே, இது குறித்து...

    பதில்: இப்போது போராட்டத்தில் ஈடுபடுவது அங்கீகரிக்கப்படாத மருத்துவர்கள் சங்கம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் சங்கத்தை அழைத்து சுகாதார துறை அமைச்சர் 21-ந்தேதி இரவு 2 மணி நேரம் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    ஆனால், அங்கீகரிக்கப்படாத மருத்துவர்கள் சங்கங்கள் வேண்டும் என்றே அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற அடிப்படையிலே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    எங்களை பொறுத்தவரைக்கும் சங்கத்தினுடைய தேர்தல் நடைபெற்று முடிந்து, வெற்றி பெற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்று அவர்களே அங்கீகரித்து இருக்கிறார்கள். அவர்களைத் தானே அழைத்து பேச முடியும். அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். அவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அரசை நம்புகிறோம். நாங்கள் வைத்த கோரிக்கைகள் அரசு பரிசீலனையில் இருக்கிறது என அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அதன்படி அரசு செய்வதாக சுகாதார துறை அமைச்சர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

    அப்படி இருந்தும் அங்கீகரிக்கப்படாத சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

    அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு முடியும் வரை ஆகின்ற செலவு ஒரு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரத்து 500. அப்படி பார்த்தால் ரூ. 67 ஆயிரத்து 500 ரூபாய் தான் மருத்துவ கல்விக் கட்டணமாக மாணவர்கள் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் 1.24 கோடி ரூபாய் செலவழிக்கிறது. அத்தனையுமே மக்களுடைய வரிப்பணம்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    இப்படி வரிப்பணத்தில் இருந்து ரூ.1.24 கோடி ரூபாய் செலவு செய்து அவர்களை மருத்துவ படிப்பு படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் அந்த மருத்துவ கல்வி கட்டணம் வெறும் ரூ.67 ஆயிரத்து 500 தான் படிப்பு முடியும் வரை செலுத்துகின்றனர்.

    தனியார் மருத்துவ கல்லூரியில் படித்தார்கள் என்றால் ஒரு கோடி ரூபாயில் இருந்து 1½ கோடி ரூபாய் செலவு செய்து தான் அந்த மருத்துவ கல்லூரியில் பயில முடியும்.

    ஆகவே அரசாங்கம் ரூ.1.24 கோடி செலவு செய்கிறது என்றால் அவர்கள் படித்து முடித்த பிறகு அரசு மருத்துவமனையில் சேர்ந்து, சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தான் இவ்வளவு செலவு செய்து அரசு அவர்களுக்கு அந்த மருத்துவ படிப்பை கொடுக்கின்றது.

    இன்றைக்கு இதர படிப்புகளுக்கு இவ்வளவு செலவு செய்வது இல்லை. அரசுக்கு பல கலைக்கல்லூரிகள் இருந்தாலும் கூட இவ்வளவு பணம் செலவழித்து கல்வி கற்பித்து கொடுப்பதில்லை.

    பொதுச்சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் ஒரு மருத்துவ கல்லூரி மாணவருக்கு அதிக அளவில் பணம் செலவு செய்து டாக்டராக உருவாக்குகிறோம்.

    அப்படி உருவாக்கப்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றுகின்றபோது பல்வேறு கோரிக்கைகள் வைக்கிறார்கள். நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். சில நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை நிறைவேற்றி கொடு என்று சொன்னால் எப்படி நிறைவேற்ற முடியும்.

    அதுவும் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்றால் தான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆகவே அங்கீகரிக்கப்படாத சங்கத்தை அழைத்து எங்களுக்கு நிறைவேற்றி கொடுங்கள் என்று சொன்னால் எப்படி?

    அதுமட்டுமல்ல, மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து தான் அவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் தான் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகிறார்கள். இம்மக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பவர்கள், பணிக்கு வரமாட்டோம் என பிடிவாதமாக இருந்தால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. மக்கள் தான் முக்கியம். மக்கள் தான் அரசாங்கம். மக்களுக்காகத்தான் மருத்துவர்கள்.

    ஆகவே ஏழை, எளிய மக்கள் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்ற பொழுது உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

    அதைவிட்டு விட்டு மருத்துவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி அமைத்து இன்றைக்கு போராட்டம் என்ற வடிவில் செய்திருக்கின்றார்கள்.

    அமைச்சர் ஏற்கனவே மருத்துவர்கள், பணிக்கு திரும்பாவிட்டால், அந்த பணியிடம் காலிப் பணியிடமாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்து விட்டார். அதன்படி அரசு நடவடிக்கை எடுக்கும்.

    ஏழை-எளிய மக்கள் மருத்துவர்களை இறைவனுக்கு சமமாக பார்க்கிறார்கள். எனவே மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×