search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    சுஜித் மரணம் குறித்து மு.க.ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகிறார்- முதலமைச்சர் பழனிசாமி

    சுஜித் மரணம் குறித்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகிறார் என்று ஓமலூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்ற குழந்தையை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த சிறுவனை உயிரோடு மீட்க முடியவில்லை. இது உண்மையில் வேதனைக்குரிய வி‌ஷயம்.

    அந்த குழந்தையை மீட்பதற்கு எந்தெந்த வகைகள் கையாளப்படுகிறது என்பதை பத்திரிகை, தொலைக்காட்சி வாயிலாக காண்பிக்கப்பட்டது. முடிந்த அளவு உயிரோடு மீட்க வேண்டும் என்று தான் திட்டமிட்டு, அதிகாரிகள் செயல்பட்டார்கள்.

    எங்களது அரசு என்.டி.ஆர்.எப்., எஸ்.டி.ஆர்.எப். மற்றும் ஓ.என்.ஜி.சி., என்.எல்.சி., என்.ஐ.டி போன்ற நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்க வேண்டும் என்று தான் பணி தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை.

    ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்.

    ஏதோ நான் கோபப்பட்டு பேசியது போல ஒரு தோற்றத்தை இன்றைக்கு ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கின்றார். இது உண்மை அல்ல. இருக்கின்ற உண்மையை நாங்கள் சொன்னோம். அந்த குழந்தையை மீட்க வேண்டும் என்பதற்காக மீட்பு பணிகளில் இறங்கிய செய்தியை முழு விபரத்தோடு தெரிவித்த பிறகும் குற்றம் சுமத்துவது வேண்டும் என்றே திட்டமிட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார் என்பது புலப்படுகிறது.

    தீபாவளி பண்டிகை அன்று மழை பெய்து கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கூட அதிகாரிகள், துறை செயலாளர் மற்றும் அமைச்சர்கள், தீயணைப்பு துறை டி.ஜி.பி. ஆகியோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு அவர்கள் மேற்பார்வையில் மீட்பு பணி நடைபெற்றது.

    இவ்வளவு இருந்தும் இந்த அரசை குறை சொல்ல வேண்டும் என காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சி தலைவர் பேசி வருவது வருத்தம் அளிக்கிறது.

    2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேனி மாவட்டத்தில் மாயி இருளன் என்ற 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். அப்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த மீட்பு பணி நடைபெற்று கொண்டிருந்தபோது ஒரு அமைச்சர் கூட அங்கு செல்லவில்லை. அதுபோல அப்போது இருந்த துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அங்கு செல்லவில்லை. ஆகவே இவர் சொல்வது போல எந்த தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி அவர், மீட்பு பணியில் ஈடுபடுத்தவில்லை. சிறுவன் இறந்த பிறகு தான் மீட்டெடுக்கப்பட்டான். இதை நான் குற்றச்சாட்டாக சொல்லவில்லை. இருக்கின்ற நிலைமையை எடுத்துச் சொல்கின்றேன்.

    முக ஸ்டாலின்

    ஆகவே மு.க.ஸ்டாலின், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடுத்து இருக்கலாம், காலதாமதம் காரணமாக அந்த சிறுவன் இறந்திருக்கலாம் என குற்றச்சாட்டை சொல்கின்றார்.

    இந்த குற்றச்சாட்டை சொல்கின்ற அவர், அப்போது ஆட்சியில் இருந்தீர்கள், அதுவும் 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தபோது ஏன்? மீட்கப்படவில்லை. இறந்து தான் மீட்டெடுத்து இருக்கின்றீர்கள்.

    ஆகவே திட்டுமிட்டு ஒரு தவறான செய்தியை, பொய்யான செய்தியை அவர் பரப்பக்கூடாது.

    உண்மையிலேயே நம்முடைய அதிகாரிகள் பாடுபட்டு 2 வயது சிறுவனை மீட்க வேண்டும் என்று இரவு, பகல் பாராமல் உச்சபட்சமாக மீட்பு பணியிலேயே ஈடுபட்டார்கள். அமைச்சர்கள் மீட்பு பணியை தீவிரப்படுத்தினார்கள்.

    அதுமட்டுமல்லாமல் ராணுவத்தை அழைக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.

    என்.டி.ஆர்.எப். என்பது பாராமிலிட்டரி தான். இதிலிருந்து தகுதியானவர்களை, திறமையானவர்களை எடுத்து இப்படி ஆபத்தான காலக்கட்டத்தில் அவர்களை பயன்படுத்துவதற்கு தான் என்.டி.ஆர்.எப். அமைப்பு அமைக்கப்பட்டிருக்கின்றது. பல துணை ராணுவப்படை வீரர்கள் தான் அதில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, அந்த பயிற்சியின் அடிப்படையில் தான் என்.டி.ஆர்.எப் வீரர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×