search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆழ்துளை கிணறு
    X
    ஆழ்துளை கிணறு

    திருப்பூர் மாவட்டத்தில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு பணி

    திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கைவிடப்பட்ட அல்லது பயன்படுத்தாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
    திருப்பூர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுபட்டியை சேர்ந்த சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

    இதையடுத்து திருப்பூர் அடுத்த பல்லடம் அருகே பருவாய் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் கவனிப்பாரற்றுக் கிடந்த 2 ஆழ்துளை கிணறுகளை சமூக ஆர்வலர்கள் தாமாகவே முன்வந்து மூடினர். இதேபோல் காங்கயம், தொட்டிபட்டி, சகாயபுரம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூடபடாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தாசில்தார் கூறியதாவது:-

    திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கைவிடப்பட்ட அல்லது பயன்படுத்தாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நிலையில் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம், புகார் தெரிவிக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×