search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த போது எடுத்த படம்.
    X
    சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த போது எடுத்த படம்.

    ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுஜித் விழுந்து இறந்தது எப்படி?- மணப்பாறை போலீசார் விசாரணை

    நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுஜித் விழுந்து இறந்தது எப்படி? என்பது குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறந்த 2 வயது குழந்தை சுஜித் மரணம் தொடர்பாக வேங்கைகுறிச்சி கிராம நிர்வாக அதிகாரி உசேன் பீவி மணப்பாறை போலீசில் நேற்று புகார் செய்தார். அந்த புகாரில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோஆரோக்கிய ராஜின் வயலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதில் தண்ணீர் இல்லாததால் அதன் மீது சாக்குகளை வைத்தும் மண்ணை வைத்தும் மூடி வைத்திருந்தனர். அந்த இடத்தில் ஏற்பட்டிருந்த குழியில் சிக்கி சுஜித் இறந்திருப்பதாக தெரியவருகிறது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் சந்தேக மரணம்(இ.பி.கோ.174)பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் இன்று இது தொடர்பாக விசாரணை நடத்துகிறார்கள்.

    சுஜித் ஆழ்துளை கிணற்று அருகில் எப்படி சென்றான்? எப்படி தவறி விழுந்தான்? அதை முதலில் பார்த்தது யார்? மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? சுஜித்துக்கு குழிக்குள் எப்போது மரணம் ஏற்பட்டது? அவனை மீட்டது எப்படி? மரணம் நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்துகிறார்கள்.

    சுஜித்துக்கு எதனால் மரணம் ஏற்பட்டது என்று மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அவன் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் போலீசாரிடம் அறிக்கை சமர்பித்தனர். போலீசார் இது தொடர்பாக சுஜித்தின் பெற்றோர், உறவினர்கள், கிராம நிர்வாக அதிகாரி, மீட்புக்குழுவினர் ஆகியோரிடம் விசாரித்து முழுமையான அறிக்கையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு அனுப்ப உள்ளனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, இதுபோன்ற சம்பவங்களில் முறைபடி போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுப்பது வழக்கமாக நடைபெறுவது உண்டு. எந்தவொரு சம்பவம் என்றாலும் அதை தெளிவுப்படுத்தி முறையாக விசாரித்து எப்.ஐ.ஆர். தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் தான் இந்த சம்பவத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறை தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×