search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஜின்சலோ  - சுபாஷ் - மன்மோகன்
    X
    சஜின்சலோ - சுபாஷ் - மன்மோகன்

    பேச்சிப்பாறை அருகே மின்சாரம் தாக்கி 3 வாலிபர்கள் பலி

    பேச்சிப்பாறை அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவட்டார்:

    பேச்சிப்பாறை கோதையாறு அருகே குற்றியாறு பகுதியில் நேற்று மாலை முதல் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால் அந்த கிராமமே இருள்சூழ்ந்து காணப்பட்டது. அப்போது மழையும் பெய்துகொண்டிருந்தது.

    இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சஜின் சலோ (22), மன்மோகன் (20), சுபாஷ் (19) ஆகிய 3 பேர் அந்த பகுதியில் ஏதாவது மின் கம்பிகள் அறுந்து கிடக்கிறதா? என்று சுற்றி பார்த்தனர். இதில் அங்கு மின்கம்பிகள் எதுவும் அறுந்து கீழே கிடக்கவில்லை என்பதை கண்டனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போய் இருக்கிறதா? என்பதை பார்க்க சென்றனர்.

    டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போய் இருக்கிறதா? என்பதை பார்க்க அதன் மின்சாரத்தை துண்டிக்க முயன்றனர். இதற்காக வாலிபர் சஜின்சலோ டிரான்ஸ்பார்மரின் லிவரை பிடித்து இழுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சஜின்சலோ மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற அருகில் நின்ற சுபாசும், மன்மோகனும் முயன்றனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இறந்து போன சஜின் சலோ எலக்டிரிசியன் ஆவார். மன்மோகன் டாரஸ் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    இதற்கிடையே 3 வாலிபர்கள் மின்சாரம் தாக்கி பலியான தகவல் குற்றியாறு பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் தெரியவந்தது. தகவல் அறிந்து அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    வனத்துறை சோதனைச்சாவடி அருகே நடந்த இந்த சம்பவம் பற்றி கடையாலுமூடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    பலியான சஜின் சலோவின் தந்தை சதீஷ்குமார். அரசு ரப்பர் பால் வெட்டும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். மன்மோகனின் தந்தை ரோலன்ரமேஷ் செண்பக ராமன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சுபாஷ் தனது தாயாரின் பராமரிப்பில் வசித்துவந்தார். இவர்கள் 3 பேரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, குற்றியாறு பகுதியில் மின்சாரத்தடை ஏற்பட்டால் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்போம். ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருவதே கிடையாது. இதனால் எங்களது கிராமங்கள் பலமணி நேரம் இருளில் மூழ்கிக்கிடக்கும். இந்த பகுதியில் சிறிய காற்று அடித்தாலே மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழும். இதனால் மின்சாரம் தடைபட்டுவிடும்.

    நாங்கள் தான் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நேற்றும் இதுபோல மின்சாரத் தடையை சரிசெய்த போது 3 பேர் பலியாகி விட்டது எங்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது எங்கள் பிரச்சினைக்கு மின் வாரிய அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டும் என்று கூறினர்.



    Next Story
    ×