search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    தமிழக மீனவர்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் ஜெயக்குமார்

    அரபிக்கடலில் கியார் புயல் வலுப்பெற்றதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 24-ந்தேதியன்று திருவனந்தபுரம் மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் வழங்கிய சிறப்பு வானிலை அறிக்கையில் அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று ‘கியார்’ என்ற தீவிர புயலாக மாறி கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கை மாவட்ட மீன்துறை அலுவலர்கள் மூலமாகவும், அனைத்து கடலோர மீனவ அமைப்புகள் மற்றும் மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் இவ்வானிலை தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டது. மீன்வளத்துறையைச் சார்ந்த இரண்டு மீன்துறை துணை இயக்குனர்கள் தலைமையில் 10 அலுவலர்கள் அடங்கிய குழு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. பிற மாநிலங்களில் கரை திரும்பும் மீனவர்களுக்கு உதவிடும் வகையில் மீன்துறை உயர் அலுவலர்கள் கோவா, ரத்தினகிரி, கார்வார், தேவ்காட் மற்றும் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குளச்சல் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

    மேற்கண்ட இந்த நடவடிக்கைகள் மூலம் அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 743 படகுகள் பத்திரமாக அருகிலுள்ள துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன. துறையின் தொடர் நடவடிக்கையின் காரணமாக ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 757 படகுகளை தொடர்பு கொண்டு புயல் பற்றிய முன்னெச்சரிக்கை செய்திகள் வழங்கப்பட்டன.

    27-ந்தேதி வானிலை அறிக்கையில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை எச்சரிக்கை தொடர்பான விரிவான செய்தி குறிப்பு, அனைத்து மீனவர் சங்கங்கள், மீனவ பிரதிநிதிகள் மற்றும் பங்கு தந்தைகளுக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள்

    ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மீன்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேரளா, கர்நாடகா, கோவா, மராட்டியம், லட்சத்தீவுகள் மற்றும் குஜராத் மாநில மீன்துறை இயக்குனர்களுக்கு, அப்பகுதியில் உள்ள மீன்பிடிப்பு படகுகளை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்குமாறும், ஏற்கனவே கியார் புயல் எச்சரிக்கை காரணமாக அந்தந்த மாநிலங்களில் கரையேறிய படகுகளை மீண்டும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவிக்குமாறும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    கடலோர காவல் படை, கப்பல் படை மற்றும் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே மீன்பிடிப்பில் இருந்த மீனவர்களை உடனடியாக கரை திரும்ப எச்சரிக்குமாறு கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    தற்போது ஏற்பட்டுள்ள புதிய புயல் சின்னத்தைத் தொடர்ந்து சிறப்பு புயல் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்வதற்காக மீன்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 35 துறை அலுவலர்களைக் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்வார்கள். மீனவர்களை புயல் மற்றும் வெள்ள காலங்களில் பாதுகாக்கும் பொருட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீன்துறை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×