search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 2வது ரிக் இயந்திரம்
    X
    சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 2வது ரிக் இயந்திரம்

    ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது

    திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

    இதையடுத்து ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும், பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது. ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால், கடினமாக பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது சவாலாக உள்ளது.

    சுமார் 80 மணி நேரத்துக்கு மேலாகியும் சிறுவனின் கதி என்ன ஆயிற்றோ? என்ற பதட்டமும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. மீட்பு பணிக்கான கிணறு தோண்டும் பணி முடிவடைய இன்னும் சில மணி நேரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர் அஜித்குமார் ஏணி மூலம் உள்ளே இறங்கி சோதனை செய்து விட்டு மேலே வந்தார்.   சுர்ஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் போது சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள இடம் காவல்துறையினர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

    இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சுமார் 88 அடி ஆழத்தில் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இது வரை 55 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆழ்துளை கிணறு அருகே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினர், மற்றும் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருவது அந்த இடத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் தயார் நிலையில் மருத்துவகுழுவினர் வரவழைக்கப்பட்டு அந்த இடத்தில் இருந்து வருகின்றனர்.

    சிறுவன் சுர்ஜித் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மீண்டு வர வேண்டும் என பல்வேறு இடங்களில் கோவில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் வழிபாடு நடத்தி வருகிறார்கள். நடுக்காட்டுப்பட்டிக்கு வந்த திரைப்பட நடிகர் தாமு, சுஜித் நலமுடன் மீண்டு வர வேண்டும் என வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதேபோல் திருநங்கைகள் மற்றும் பாதிரியார்களும் பிரார்த்தனை செய்தனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் குழந்தை சுஜித்திற்காக ஆங்காங்கே பொதுமக்கள் கடவுளிடம் மனமுருகி வேண்டுதல் நடத்தி, அது குறித்த தகவல்களை சமூக வலைத்தளங் களில் பரப்பி வருகிறார்கள்.
    Next Story
    ×