search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆழ்துளை கிணறு அருகே ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெறுகிறது.
    X
    ஆழ்துளை கிணறு அருகே ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெறுகிறது.

    குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி எந்த சூழ்நிலையிலும் கைவிடப்பட மாட்டாது- வருவாய் ஆணையர் உறுதி

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும்பணி எந்த சூழ்நிலையிலும் கைவிடப்படமாட்டாது என வருவாய் நிர்வாக ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து ஆழ்துளை கிணற்றின் அருகில் குழி தோண்டி மீட்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது.

    ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால், கடினமாக பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவதில் தொய்வு ஏற்பட்டது.




    அதன்பின்னர் ராமநாதபுரத்திலிருந்து மிகவும் அதிக திறன் கொண்ட 2வது ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகிறது. எனினும் இந்த இயந்திரத்தின் துளையிடும் கருவியின் டிரில் பிட் அடுத்தடுத்து உடைவதால் பணியில் மேலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடினமாக பாறையை துளையிட்டு குழி தோண்டுவதில் பெரும் சிரமம் இருப்பதால், இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளர்.

    நான்காவது நாளாக மீட்பு பணி தொடரும் நிலையில், அப்பகுதியில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் மீட்புக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் பணியை தொடர்கின்றனர். 

    வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மழையில் நனைந்தபடியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, துளையிடுவதற்கு ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மீட்பு பணி நடைபெறும் என்றும் கூறினார்.

    ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி

    “துளையிடும் பணி திருப்தி தரும் வகையில் இல்லை. கடினமான பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் மீட்பு பணி கடும் சவாலாக உள்ளது. குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். மீட்பு பணி குறித்து மனோதத்துவ நிபுணர்கள் மூலம், பெற்றோரிடம் விளக்கி கூறப்படும். மீட்பு பணி தொடர்பாக தவறான நம்பிக்கையை ஊட்டக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்.

    ஆழ்துளை கிணற்றில் குழந்தை தற்போது 88 அடியில் இருக்கிறது. குழந்தை தொடர்ந்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. 98 அடி வரை குழி தோண்டும் பணி நடைபெறும். எந்த சூழ்நிலையிலும் மீட்பு பணிக்காக குழி தோண்டும் பணி நிறுத்தப்படமாட்டாது. குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் பாதியிலேயே கைவிடப்பட மாட்டாது. மழை பெய்தாலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும். தொழில்முறை பொறியாளர்களின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி முயற்சிகள் செய்து வருகிறோம். 

    முழுமையாக பள்ளம் தோண்ட 12 மணி நேரம்வரை ஆகும். இன்னும் ஆழமாக தோண்டும்போது கரிசல் மண் தென்பட வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே பள்ளம் தோண்டும் பணி தொடரும். தொழில்முறையில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைத்தான் செய்கிறோம். மீட்பு பணிக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும்.” என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
    Next Story
    ×