search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் அரசு மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    திருவாரூர்:

    நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும், கிராமப்புறங்களில் சேவை செய்த அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.

    இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் அரசு மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு மட்டும் இயங்கி வருகிறது. மற்ற பிரிவுகளில் மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 120 உள்பட, மாவட்டம் முழுவதும் செயல்படும் 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 60 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் நோயாளிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

    மருத்துவர்களின் இந்த போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறும் போது, ‘‘அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவு மற்றும் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பிரிவுகளில் மருத்துவர்கள் பணியில் உள்ளனர். அரசு உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் மருத்துவர்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றனர்.

    இதேபோல் தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×