search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய மார்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள கடைகள்.
    X
    புதிய மார்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள கடைகள்.

    11 ஆண்டுக்கு பின் புதிய கட்டிடத்துக்கு இடம் மாறும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்

    கோர்ட்டு உத்தரவு எதிரொலியால் 11 ஆண்டுக்கு பின் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் புதிய கட்டிடத்துக்கு மாற இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தென்னிந்தியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தை என அழைக்கப்படும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மிகவும் பிரசித்திப்பெற்ற காய்கறி சந்தை ஆகும். ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் திருச்சி, தூத்துக்குடி ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும் அதே போல கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காய்கறிகள் தினந்தோறும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது,

    ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் இங்கு கொண்டு வரப்பட்டு வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. குறிப்பாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 90 சதவீதம் காய்கறிகள் கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி ஆகிறது. மற்ற மாநிலங்களான பம்பாய், கல்கத்தா, பெங்களூரு போன்ற மாநிலங்களுக்கு காய்கறிகள் தினந்தோறும் ஏற்றுமதியாகிறது,

    இந்த நிலையில் சுமார் 43 மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையம் முன்பு ஒருசில வியாபாரிகளால் சிறிய அளவில் துவங்கப்பட்ட ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தற்போது பார் போற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது மறுக்கப்படாத உண்மை. இந்த சந்தை ஒட்டன்சத்திரம் பிரதான பேருந்து நிலையம் எதிரே உள்ள சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகளை கொண்டு இயங்கி வருகிறது,

    மேலும் நகரின் மையப்பகுதியில் சந்தை அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இதனை குறைக்கும் வகையில் ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் 2008-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் ரூ.4 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விளைபொருள் அங்காடி திறந்துவைக்கப்பட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை வேளாண் விளைபொருள் அங்காடி நடைமுறைக்கு வராமல் பூட்டிய நிலையில் காணப்பட்டது.

    இதனால் அரசின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் நாசமாகும் நிலை ஏற்பட்டு வந்தது, இதனை அறிந்த ஒட்டன்சத்திரம் புலியூர் நத்தம் பகுதியை சேர்ந்த சிவகணேசன் என்ற சமூக ஆர்வலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அங்காடியை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒட்டன்சத்திரம் புதிய மார்க்கெட்டை நவம்பர் 3-ம் தேதி திறந்து மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று தீர்ப்பளித்தது,

    இதனடிப்படையில் தற்போது இயங்கிவரும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கடைகள் மற்றும் வியாபாரிகள் நாகனம்பட்டி புறவழி சாலையில் அமைந்துள்ள வேளாண் விளைபொருள் அங்காடிக்கு இடம் பெயர்கின்றனர். இதனை முன்னிட்டு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மதுரையைச் சேர்ந்த ஜோசப் அருளானந்தம் வேளாண் விளைபொருள் அங்காடி மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறார்.

    அங்காடி மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, ஆண் பெண் இருபாலருக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட கழிப்பறை வசதி, காய்கறிகளை காய வைப்பதற்கான வசதி மற்றும் வங்கி வசதி, மேலும் காய்கறி வண்டிகளை எடை போடுவதற்கான எடைமேடை, காய்கறிகளை பதப்படுத்தி பாதுகாப்பதற்கான குளிர்பதன கிடங்கு, உள்ளிட்ட ஏராளமான வசதிகளுடன் வருகின்ற நவம்பர்3-ந் தேதி காமராஜர் காய்கறி சந்தை என்ற பெயரில் திறந்து வைக்கப்பட உள்ளது,

    கட்டி முடிக்கப்பட்டு சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைமுறைக்கு வரும் ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் அங்காடி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×