search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு
    X
    நீட் தேர்வு

    ‘நீட்’ தேர்வு ஆள் மாறாட்டத்தில் மேலும் ஒரு சென்னை மாணவர்

    சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் மீது நீட் தேர்வு மோசடி புகார் எழுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சென்னை மாணவர் உதித்சூர்யா சிக்கினார்.

    மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தையும் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் மேலும் சில மாணவர்கள் நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து மாணவர்கள் ராகுல், பிரவீன், இர்பான், மாணவி பிரியங்கா ஆகியோரும் அவர்களது பெற்றோரும் சிக்கினர்.

    நீட் தேர்வு மோசடி தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள், ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன.

    இந்த நிலையில் சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் (எம்.எம்.சி.) 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் மீதும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புகார்கள் சென்றன.

    இந்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி சென்னை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தேர்வு கமிட்டிக்கு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவிட்டார்.

    இதுகுறித்து தேர்வு கமிட்டி செயலாளர் செல்வராஜன், புகாரில் சிக்கிய மாணவரின் ஆவணங்களை ஆய்வு செய்தார். அதில் நீட் தேர்வு நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும், சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் இருக்கும் ஆவணங்களில் புகைப்படமும் வித்தியாசமாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    நீட் தேர்வு

    இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறும்போது, மாணவரின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது அவர் பீகாரில் உள்ள மையத்தில் நீட் தேர்வு எழுதி உள்ளதாக இருக்கிறது.

    அவரது புகைப்படத்தில் வித்தியாசங்கள் உள்ளன. இதனால் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் கடந்த ஆண்டே நடந்து இருக்கலாம் என்று நம்புகிறோம் என்றார்.

    இவ்விவகாரம் குறித்து சென்னை அரசு மருத்துவ கல்லூரி டீன் ஜெயந்தி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மாணவரின் தொடர்புடைய ஆவணங்களை கொடுத்துள்ளார்.

    சென்னை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது, “புகாரில் சிக்கியுள்ள மாணவர் முதல் ஆண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து அவருக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தினோம்.

    ஆனால் அவர் பாடங்களை படிக்க சிரமப்பட்டார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் ஏன் பாடங்களை புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறார் என்று ஆச்சரியம் அடைந்தோம் என்றார்.

    சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் மீது நீட் தேர்வு மோசடி புகார் எழுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×