search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.
    X
    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றது. இந்த தொகுதிகளை கைப்பற்ற போவது யார்? என்பது பிற்பகலில் தெரிந்துவிடும்.
    நெல்லை:

    நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதிக்கு கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 66.35 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நல குறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி இறந்தார். இதையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் 21-ந் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.), புகழேந்தி (தி.மு.க.), கந்தசாமி (நாம் தமிழர் கட்சி) மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.

    இத்தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 84.41 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தல் முடிவடைந்ததும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். முன்னணி நிலவரம் காலை 9 மணியில் இருந்து தெரியவரும்.

    ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் ஒவ்வொரு வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விவரம் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.

    பிற்பகலில் பெரும்பாலான சுற்று முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை கைப்பற்றுவது யார்? என்பது அப்போதே தெரிந்து விடும்.

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான காமராஜ் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

    இந்த தொகுதி வாக்கும் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கை குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அனைத்து வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், இந்த இரண்டு தொகுதிகளிலும் தலா 5 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவை உறுதி செய்யும் வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் பதிவாகி இருந்த வாக்குகள் எண்ணப்படும்.

    எந்தெந்த வாக்குச்சாவடியில் உள்ள வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களை இதற்காக தேர்வு செய்யவேண்டும் என்பது வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் அந்த மையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உறுதி செய்யப்படும். வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், அவை வைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் இருந்த எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் சரியாக உள்ளதா? என்பது பரிசோதனை செய்யப்படும். மேலும், வேட்பாளரின் முகவர்கள் யாரும் வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது ஆட்சேபனை தெரிவித்தால், அது சரிபார்க்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற ஓட்டுகளின் விவரங்கள் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×