search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காமராஜர் நகர் தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை

    காமராஜர் நகர் தொகுதியில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. முதல் கட்டமாக தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.

    தொகுதி முழுவதும் 21 இடங்களில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

    தொகுதியில் மொத்தமுள்ள 35 ஆயிரத்து 9 வாக்காளர்களில் 24 ஆயிரத்து 310 பேர் வாக்களித்துள்ளனர். இது, 69.44 சதவீத வாக்கு பதிவாகும்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடிகளில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. முதல் கட்டமாக தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

    இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் திறக்கப்பட்டு எண்ணப்படும். 32 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 3 சுற்றுகளாக எண்ணப்படும்.

    வாக்கு எண்ணிக்கைக்காக 11 மேஜைகள் போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் விவிபாட் எந்திரங்களில் பதிவான வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டு சரி பார்க்கப்படும்.

    காலை 10.30 மணியளவில் வேட்பாளர் முன்னணி விவரங்கள் வெளியிடப்படும். மதியம் 12 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் அடையாள அட்டை வைத்துள்ள வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் பாலிடெக்னிக் வளாகத்தை சுற்றிலும் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×