search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பழனி அருகே தண்டவாளத்தில் கல் வைத்த 3 பேர் கைது

    பழனி அருகே கோதமங்கலம் பகுதியில் தண்டவாளத்தின் நடுவில் ‘ஸ்லீப்பர்’ கல்லை வைத்த 3 பேரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

    பழனி:

    பழனியை அடுத்து கோதமங்கலம் ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக பாலக்காடு மற்றும் கோவைக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில்பாதை அகல ரெயில்பாதையாக மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து ‘மீட்டர் கேஜில் பயன்படுத்தப்பட்ட ‘ஸ்லீப்பர்’ கற்கள் அந்த பகுதியில் ரெயில்பாதையோரம் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 12-ந்தேதி ரெயில்வே பொறியாளர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கோதமங்கலம் பகுதியில் தண்டவாள ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது கோதமங்கலம் ரெயில்வேகேட்டை அடுத்து தண்டவாளத்தில் ஒரு ‘ஸ்லீப்பர்’ கல் கிடந்தது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக ரெயில்வே பணியாளர்களை அழைத்து அந்த கல்லை அப்புறப்படுத்தினர். எனினும் அந்த வழியாக ரெயில் ஏதும் கடந்து செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பின்னர் இந்த ‘ஸ்லீப்பர்’ கல்லை தண்டவாளத்தில் வைத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து அதிகாரிகள் பழனி ரெயில்வே போலீசில் புகார் செய்தனர்.

    தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமி‌ஷனர் ஜெகநாதன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    அதன்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பழனி ரெயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோதமங்கலம் குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்த பிரபு (வயது 37), 1-வது வார்டை சேர்ந்த சின்னத்துரை (27), 2-வது வார்டை சேர்ந்த மலையாளம் (33) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தினர். அதில் அவர்கள் ‘ஸ்லீப்பர்’ கல்லை தண்டவாளத்தின் குறுக்கே வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×