search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருத்துறைப்பூண்டியில் எஸ்.பி.அலுவலக ஊழியர் வீட்டில் 50 பவுன் -ரூ.60 ஆயிரம் கொள்ளை

    திருத்துறைப்பூண்டியில் எஸ்.பி. அலுவலக ஊழியர் வீட்டில் நகை- பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தோப்படி தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 50). இவர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ‌ஷர்மிலி பானு. இவர் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜாகீர் உசேன், தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு கடந்த சனிக்கிழமை காரில் புறப்பட்டு சென்றார்.

    இதையடுத்து நேற்று மாலை ஜாகீர் உசேன் ஊருக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு நெம்பி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் பின்பக்க கொல்லை கதவும் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து திடுக்கிட்டார்.

    இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி அலங்கோலமாக கிடந்தது. பின்னர் பீரோவை சோதனை செய்த போது அதில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    பூட்டியிருந்த வீட்டை மர்ம கும்பல் நோட்டமிட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி திருத்துறைப்பூண்டி போலீசில் ஜாகீர் உசேன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.
    Next Story
    ×