search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிக்க காத்திருக்கும் பெண்கள்.
    X
    வாக்களிக்க காத்திருக்கும் பெண்கள்.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

    தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
    விக்கிரவாண்டி:

    தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    கடந்த 15 நாட்களாக இரு தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து இரு தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரிவாக செய்தது.

    இன்று அதிகாலை 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்திப் பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 7 மணிக்கு இரு தொகுதிகளிலும் உள்ள 574 வாக்குச் சாவடிகளிலும் திட்டமிட்டப்படி ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக பெரும்பாலான இடங்களில் மக்கள் காலை 6.30 மணிக்கெல்லாம் ஓட்டுச்சாவடிக்கு வந்து விட்டனர்.

    காலை 7.30 மணிக்கு இரு தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் இரு தொகுதிகளிலும் காலையில் இருந்தே வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தது.

    வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்.

    காலை முதலே பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுபோட்டனர். கிராமப் புறங்களில் உள்ளவர்கள் வேலைக்கு செல்வதால் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு வந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.

    விக்கிரவாண்டியில் இன்று காலையும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் வாக்களிக்க வந்த பெண்கள் குடைபிடித்தபடி வந்தனர்.

    நாங்குநேரி தொகுதியில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி.நகர், நாங்குநேரி, களக்காடு உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஆர்வமுடன் வந்து காத்திருந்தனர்.

    ஒரு சில வாக்குச்சாவடிகளில் எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க சற்று காலதாமதம் ஆனது. காலை 8 மணிக்கு பிறகு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

    மொத்தம் 2,471 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 170 வாக்குச்சாவடிகளில் வீல் சேர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் 114 பார்வையற்ற வாக்காளர்களுக்காக பிரத்யேக வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு பிரெய்லி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    காலை 9 மணி அளவில் முதல் 2மணி நேரத்தில் நாங்குநேரியில் 18.04 சதவீதம் வாக்குகளும், விக்கிரவாண்டியில் 12.84 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது. காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 32.54 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 23.89 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

    விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகளும், நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விக்கிரவாண்டியில் 50 வாக்குச் சாவடிகளும், நாங்குநேரியில் 110 வாக்குச்சாவடிகளும் பதட்டம் நிறைந்ததாக கணிக்கப்பட்டிருந்தன. அந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் பாதுகாப்புக்காக துணைநிலை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் 1930 பேரும், நாங்குநேரி தொகுதியில் 1650 பேரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

    ஓட்டுப்பதிவை அமைதியாகவும், சுமூகமாகவும், நியாயமாகவும் நடத்தி முடிப்பதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளின் ஓட்டுப்பதிவுகளும் சி.சி.டி.வி. மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அதோடு வாக்குப்பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இரு தொகுதிகளின் ஓட்டுப்பதிவை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தபடி அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

    வாக்களிக்க மழையில் குடைபிடித்த படி காத்திருக்கும் வாக்காளர்கள்.


    இரு தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு 574 வாக்குச் சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்படும். பின்னர் அந்த இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்து செல்லப்படும்.

    2 நாட்கள் கழித்து 24-ந்தேதி (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடத்தப்படும். 9 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரிய வரும். மதியத்துக்குள் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்பட 12 பேர் களத்தில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்பட 23 பேர் போட்டியிடுகிறார்கள். 23 வேட்பாளர்கள் நிற்பதால் நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளிலும் தலா 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் முடிவு தமிழக மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த இரு தொகுதிகளும் தி.மு.க., காங்கிரஸ் வசம் இருந்தவை. அந்த தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது.

    இதை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. - தி.மு.க. இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி பலப்பரீட்சைக்கு விடையளிக்க வாக்காளர்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×