search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தீபாவளி - திருப்பூரில் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பு

    தீபாவளி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருப்பூரில் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டது.
    திருப்பூர்:

    பின்னலாடை நகரான திருப்பூரில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்காக இவர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதற்காக திருப்பூர் மாநகரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் சிறப்பு பஸ்களை அங்கிருந்து இயக்குவதில் இடநெருக்கடி ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநகரில் தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்கான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை கமி‌ஷனர் உமா தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் உதவி கமி‌ஷனர் கஜேந்திரன், போக்குவரத்து போலீசார், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கோவை, ஈரோடு மார்க்கமாக செல்லும் பஸ்களை திருப்பூர் குமார் நகரில் உள்ள பழைய வடக்கு வட்டார போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல் திருச்சி, தஞ்சை மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலைய பகுதியில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் பூலுவப்பட்டி ரிங் ரோடு வழியாக இயக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை இந்த தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் பஸ்களை இயக்கவும், புதுமார்க்கெட் வீதி வழியாக வாகன போக்குவரத்தை நிறுத்தவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.
    Next Story
    ×