search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆறுமுகநேரியில் பிரபல கொள்ளையன் கைது

    ஆறுமுகநேரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள லெட்சுமிமாநகரம் உச்சினிமகாளி அம்மன் கோவிலில் நேற்று நள்ளிரவு யாரோ கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அருகே குடியிருந்து வரும் ஆசிரியை பத்மாவதி வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது கோவிலில் யாரோ 57 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் உண்டியலை உடைத்து திருடிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதைபார்த்த அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இதனால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து திருடனை பிடிக்க முயன்றனர். அதற்குள் திருடன் தப்பியோடினான். இதை பார்த்த அவர்கள் கொள்ளையனை துரத்தி சென்றனர். ஆனால் திருடன் அதேபகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து புதருக்குள் தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ரோந்து பணியில் இருந்த ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருடனை தேடினர். ஆனால் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதி இளைஞர்கள் கொள்ளையனை தேடினர். அப்போது அங்கு புதருக்குள் பதுங்கி இருந்த கொள்ளையனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையன் ஆறுமுகநேரி-மூலக்கரை செல்லும் சாலையில் குருநாத சுவாமி கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது, பின்னர் அதே பகுதியில் உள்ள பாஸ்கர் (52) என்பவரது வீட்டில் உள்ள கதவை உடைத்து வீட்டினுள் இருந்த 1½ பவுன் நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடித்தது, மேலும் அதே பகுதியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகரான மகாலிங்கராஜ் (53) என்பவர் வீட்டிலும் கொள்ளையடித்தது தெரியவந்தது. அவன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×