search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா மாளிகையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டம்
    X
    அம்மா மாளிகையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டம்

    சென்னையில் 52 இடங்களில் தயார் நிலையில் மீட்புக் குழு - மாநகராட்சி நடவடிக்கை

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி சென்னையில் 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் கூறினார்.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி, சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் அம்மா மாளிகையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி 1,894 கி.மீ. நீளத்திற்கு 7,351 மழைநீர் வடிகால்களை பராமரித்து வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 468 இடங்களில் சுமார் ரூ.440 கோடியில் 155.49 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    மழைநீர் வடிகால்களில் சுமார் ரூ.35.05 கோடியில் தூர்வாரும் பணிகள் மற்றும் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக 5000 ஒப்பந்த பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் உள்ளன. இவ்விடங்களில் மழைநீரை வெளியேற்ற ஏதுவாக 60 உயரழுத்த பம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

    மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை எந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

    மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களை தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்ய தேவையான பொருட்களும், உணவு தயாரிக்க அனைத்து அம்மா உணவகங்களும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும், 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார்நிலையில் உள்ளன.

    பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு 1 இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார்நிலையில் உள்ளன. அவசரகால பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 108 ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களும், 126 லாரிகளும் தயார்நிலையில் உள்ளன.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளின் விளைவாக கடந்த காலங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கிய நிலை மாறி தற்போது 100-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கும் நிலை உள்ளது.

    மேலும், கடந்த 2015-ம் ஆண்டு 306 இடங்கள் அதிகளவு மழைநீர் தேங்கும் பகுதிகளாக இருந்தன. தற்போது மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளால் 8 இடங்கள் மட்டுமே அதிகளவு மழைநீர் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு அவ்விடங்களிலும் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்களின் கரையோரங்களில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் வசித்து வரும் 15081 குடும்பங்கள் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×