search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்
    X
    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்

    21, 22-ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி வருவதால் வருகிற 21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதால் சென்னை உள்பட வட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்தது.

    இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியையொட்டி காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.

    அது தீவிரமாகி வருவதால் வருகிற 21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மழை

    டெல்டா மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைவதால் வருகிற 21 (திங்கட்கிழமை), 22-ந்தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம்- 12 செ.மீ, வேடச்சந்தூர்- 7 செ.மீ. குமாரபாளையம், சத்தியமங்கலம், சங்கரன்கோவில், மேட்டுப்பாளையம் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×