search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயில் கருதி சேதமான பொருட்களை படத்தில் காணலாம்
    X
    தீயில் கருதி சேதமான பொருட்களை படத்தில் காணலாம்

    கோவையில் பெண் எரித்துக் கொலை - நகைகள் கொள்ளை

    கோவையில் பெண்ணை எரித்து கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலேரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி தேவகி (வயது 45). இவர்கள் இருவருக்கும் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் மணலி. இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மயிலேரிபாளையத்துக்கு வந்து குடியேறி அங்கு மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். கடை அருகே வீடு உள்ளது.ஜெயபால் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று இருந்தார். தேவகி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு அவர் கடையில் தூங்கி கொண்டு இருந்தார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தேவகி மளிகை கடை தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

    அப்போது தேவகி கழுத்தில் ரத்த காயங்களுடன், 2 காதுகளும் அறுக்கப்பட்டு கம்மல் இல்லாமல் உடல் கருகி பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக செட்டிப்பாளையம் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவு தேவகியின் மளிகை கடைக்குள் பூட்டை உடைத்து நுழைந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த கம்மல், நகையை திருடி விட்டு அவரது உடலுக்கு தீ வைத்து விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது. மோப்ப நாய் துப்பு துலக்காமல் இருக்க உடல் அருகே மிளகாய் பொடியை தூசி சென்றதும் தெரிய வந்தது.

    இந்த தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தேவகியை கொன்று நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்? என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    Next Story
    ×