search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

    பருவமழை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அறிவுறுத்தினார்.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான நோய்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை இறங்கி உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக தனியார் மருத்துவமனைகளின் பருவமழை நோய் தடுப்பு தயார் நிலை மற்றும் மருத்துவ முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூர் சுகாதாரம் மற்றும் குடும்ப நல பயிற்சிமைய அரங்கில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், திட்ட இயக்குனர் நாகராஜ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கொசு உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு வீடாக சென்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் 3 ஆயிரத்து 486 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகம். டெங்குவை கட்டுப்படுத்த துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழை நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அனைத்து தனியார் மருத்துவமனைகளும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், அவசர சிகிச்சைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான பொருட்களை கூடுதலாக இருப்பு வைத்திருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு மழைக்காலத்தில் பிரசவ தேதி வருமாயின் அவர்களை முன்கூட்டியே அனுமதித்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×