search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்யபிரதசாகு
    X
    சத்யபிரதசாகு

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணிக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து வெளியூர்காரர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்தார்.
    சென்னை:

    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் 19-ந் தேதி(இன்று) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, 19-ந் தேதி மாலை 6 மணிக்குள் தொகுதிக்குள் இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரும் வெளியேற வேண்டும். கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியூர் ஆட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா? என்பது கண்டறியப்படும்.

    விக்கிரவாண்டி தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் இருந்தாலும் வாக்களிக்க தேவையான ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் இருந்தால் மட்டுமே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    ஒரு தொகுதிக்கு 3 துணை ராணுவப்படை வீதம் மொத்தம் 6 துணை ராணுவப்படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்துள்ள புகார் குறித்து நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அவரது அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஆளும் கட்சியினர் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் கூடுதல் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு அளிக்க அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடியும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடியும் உள்ளன. நாங்குநேரி தொகுதியில் 1,460 பேரும், விக்கிரவாண்டியில் 1,617 பேரும் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியாகவும், நாங்குநேரி தொகுதியில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியாகவும் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×