search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சாரல் மழை

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சாரல் மழை பெய்துள்ளதால் அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நெல்லையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பிற்பகலில் லேசான மழை பெய்தது. நேற்று இரவு நெல்லையில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. அம்பை, மணிமுத்தாறு, பாபநாசம், ராதாபுரம், செங்கோட்டை, தென்காசி,குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. 

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசி பகுதியில் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நெல்லையில் பாளை மற்றும் ராதாபுரம், தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, நாங்குநேரி பகுதிகளில் இன்று காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 106.30 அடியாக இருந்தது. ஆனால் நேற்று மாலை பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 337 கனஅடியிலிருந்து 829 கனஅடியாக உயர்ந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 106.95 அடியாக உள்ளது. பாசனத்திற்காக அணையிலிருந்து 154.75 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 119.22 அடியாக இருந்தது. இன்று 120.67 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 46.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 607 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வெளியேற்றம் இல்லை. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 123.25 அடியாக உள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 70.21 அடியாக உள்ளது. குண்டாறு அணை 72 -வது நாளாக நிரம்பி வழிகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் நேற்று மாலை குற்றாலத்தில் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இன்று காலை தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் மெயினருவியில் ஆர்ச் மீது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாபயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    அம்பாசமுத்திரம் -14.60

    ஆய்க்குடி-12.20

    மணிமுத்தாறு -3.20

    தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று பல பகுதிகளில் மிதமான மழை மற்றும் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கழுகுமலையில் 36 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×